இன்று (15) காலை முதல் பெய்து வரும் பலத்த மழையால் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், நுகேகொட- நாவல (Nugegoda–Nawala) வீதி முழுமையாக நீரில் மூழ்கியதால் வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இது தவிர ஆமர் வீதி, கோட்டை , தெமட்டகொட உட்பட பல பகுதிகளின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சிறப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக இப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலை நிலவுவதாகவும், அவ்வப்போது மழையும் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளது.
தாழ்வான பகுதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.













