டித்வாவைப் போன்றே மற்றொரு பாரதூரமான பேரழிவே ஜனநாயகத்தை சுருக்கும் நடவடிக்கையுமாகும். 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்திற்கு மரண அடி கொடுக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. ஜனநாயகத்தை ஸ்தாபிக்கும் பிரதான தூண்களான சட்டவாக்கதுறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களையும் வலுவிழக்கச் செய்து, நீதித்துறையை பலவீனப்படுத்தி, நிறைவேற்றுத்துறையை பலப்படுத்தி, நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் அடிமையாக்கும் பெரும் சதித்திட்டமே 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தமாகும். இது ஜனநாயகத்தை சுருக்கும், ஜனநாயகத்திற்கான வெளியை இல்லாது செய்யும், நாட்டில் தனக்கட்சு ஆட்சி முறையை உருவாக்கும் ஜனநாயகத்தின் மீதான மரண அடியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு வீடுகளை மெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் வத்தளை மொனார்க் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘Rhythm of the Night’ இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிக்க முற்படும் இந்த முயற்சியை தோற்கடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சுதந்திரமாக அரசியல் செய்யவோ, கருத்துக்களை தெரிவிக்கவோ முடியாத நிலை ஏற்படும். தனிநபர் சுதந்திரம் மிகவும் முக்கியமானதாகும். 220 இலட்சம் மக்களின் அரசியல் மற்றும் சமூக சுதந்திரம் இதன் மூலம் உறுதியாகின்றன. அவ்வாறே, அதிகாரங்களுக்கு இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளை (Checks and Balances) பாதுகாக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இலங்கை காலநிலை மாற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் என்ற ரீதியில், நானும் ஏனைய தரப்பினரும் நமது நாடு எதிர்கொள்ள இருக்கும் பெரும் சவாலொன்று தொடர்பில் விடயங்களை முன்வைத்துள்ளோம். காலநிலை மற்றும் வானிலை நிபுணர்கள் சுட்டிக்காட்டுவது போன்று, எல் நினோ (El Nino) மற்றும் லா நினோ (La Nina) நிலைமைகள் காரணமாக நமது நாட்டிற்கு பல்வேறு தாக்கங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. வறட்சியைப் போலவே வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட காலநிலை அனர்த்தங்கள் தொடர்பிலும் எச்சரிக்கைகளும் எதிர்வுகூறல்களும் விடுக்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வறட்சி நிலைமை காரணமாக நீர்மின் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் குறிப்பிடத்தக்க நிலைமை உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நமது நாட்டிற்கு இதனைவிட கூடிதலான முன்னாயத்த தயார்படுத்தல் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. தற்போதுள்ள அனர்த்த முகாமைத்துவ பொறிமுறை காலாவதியாகி காணப்படுகின்றன. காலத்திற்கு பொருந்தும் ஒன்றாக இல்லை. புதிய கோணத்தில் சிந்தித்து இந்தச் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய புதிய வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும். அவ்வாறே, பேரழிவு ஏற்படுவதற்கு முன்னரே அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைக்கும் வேலைத்திட்டத்தை நோக்கியும் நாம் செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சுனாமி மற்றும் டித்வா பேரழிவுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.














