போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட ஒரு கப்பலின் மீது சனிக்கிழமையன்று (19) கரீபியன் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
லத்தீன் அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகக் கூறப்படுபவர்களுக்கு எதிரான தனது பல மாத கால நடவடிக்கையைத் தொடர்ந்து வரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் அண்மைய தாக்குதலாக இது அமைந்துள்ளது.
சுமார் ஓராண்டுக்கு முன்பு ‘போதைப்பொருள் பயங்கரவாதிகள்’ என்று தாங்கள் முத்திரை குத்தியவர்களை அமெரிக்க நிர்வாகம் குறிவைக்கத் தொடங்கியதிலிருந்து, அமெரிக்க இராணுவம் நடத்திய 69 படகுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த அண்மைய தாக்குதலுடன் குறைந்தது 231-ஆக உயர்ந்துள்ளது.
கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் கரீபியன் கடலில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த இராணுவத்தின் பெரும்பாலான அறிக்கைகளைப் போலவே, அறியப்பட்ட கடத்தல் பாதைகள் வழியே குற்றம் சாட்டப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் குறிவைத்ததாக அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.














