டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் செவ்வாயன்று (22) கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தத்தின் கீழ், தெற்கு கிரீன்லாந்தில் பனிப்போர் காலத்து இராணுவத் தளம் ஒன்றை மீண்டும் நிறுவவும், கிழக்குக் கடற்கரையில் மற்றொரு தளத்தை அமைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக இவ்விவகாரம் குறித்து அறிந்த மூன்று வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.
டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், உள்ளூர் நேரப்படி செவ்வாய் காலை 10:30 மணிக்கு தங்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை; ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை அதன் விவரங்கள் இறுதி செய்யப்படாது என்று, பெயர் குறிப்பிட விரும்பாத, ஒப்பந்தம் குறித்த விவரங்களை அறிந்த மூவர் தெரிவித்தனர்.
இந்த ஒப்பந்தம் ஆர்க்டிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை அமெரிக்கா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளிடம் மட்டுமே விட்டுவிடாமல், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) எனும் இராணுவப் பாதுகாப்பு கூட்டணியின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதாக டென்மார்க் கூறுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல மாதங்களாக விடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்தே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை அமெரிக்கா தன்வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நீண்டகாலமாகவே கூறிவரும் அவர், ஓரளவு தன்னாட்சி அதிகாரம் கொண்ட டென்மார்க்கின் இந்த நிலப்பகுதியைக் கைப்பற்ற இராணுவ அல்லது பொருளாதார ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பையும் அவ்வப்போது மறுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இருப்பினும், கருத்துக்கணிப்புகளின்படி, கிரீன்லாந்து மக்கள் பெரும்பான்மையானோர் இக்கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.
ஜனவரி மாதத்தில் உச்சத்தை எட்டிய ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்கள், நேட்டோ (NATO) அமைப்பிற்குள் ஒரு தூதரக நெருக்கடியை ஏற்படுத்தின.
அத்துடன், அந்த அழுத்தத்தைத் தணிக்கும் நோக்கில் வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்த டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தை அவை தூண்டின.
பனிப்போர் காலத்தில், கிரீன்லாந்தில் அமெரிக்கா 17 இராணுவத் தளங்களையும் 10,000-க்கும் மேற்பட்ட இராணுவப் பணியாளர்களையும் பராமரித்து வந்தது.
ஆனால் இன்று, சுமார் 150 அமெரிக்க இராணுவப் பணியாளர்களுடன் கூடிய ‘Pituffik Space Base’ மட்டுமே அங்கு எஞ்சியுள்ளது.















