ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா நடத்தவிருந்த தாக்குதல்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறுதி நேரத்தில் இரத்து செய்ததாகத் தகவல் வெளியான நிலையில், சவுதி ஆதரவுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிற பகுதிகளிலிருந்து செங்கடல் கடற்கரைப் பகுதியைத் துண்டிக்கும் நோக்கில், யேமனில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த உயரமான பகுதிகளைக் கைப்பற்ற அவர்கள் திங்களன்று (21) முயன்றனர்.
ஈரானின் ஆதரவு பெற்ற குழுவொன்று இந்த மாதம் மேற்கொண்ட மின்னல் வேக முன்னேற்றம், பரந்த அளவிலான மத்திய கிழக்கு மோதலை ஒரு புதிய களத்திற்கு விரிவுபடுத்தியுள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கும் மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
யேமன் போரில் பங்கேற்குமாறு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான் விடுத்த தொடர்ச்சியான கோரிக்கைகளை வொஷிங்டன் இதுவரை நிராகரித்து வந்துள்ளது.
மோதல் தீவிரமடைந்ததிலிருந்து தலைநகர் மீது நடத்தப்பட்டதாகத் தோன்றும் முதல் தாக்குதல்கள் குறித்து சவுதி அரேபியா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
சவுதி இளவரசரின் புதிய கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த ஞாயிற்றுக்கிழமையன்று ட்ரம்ப் நிர்வாகம் தயாராகியிருந்ததாக ‘நியூயோர்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டது.
ஆனால், விமானங்கள் மீது குண்டுகள் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலேயே, இறுதி நேரத்தில் அந்தத் தாக்குதல்களை ட்ரம்ப் இரத்து செய்ததாக அச்செய்தித்தாள் குறிப்பிட்டது.
யேமனின் சவுதி ஆதரவு பெற்ற மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் ரியாத்தை தளமாகக் கொண்ட ஜனாதிபதி ரஷித் அல்-அலிமி, ஞாயிறன்று தொலைபேசி வாயிலாக ட்ரம்ப்பிடம் அமெரிக்க இராணுவ உதவியைக் கோரியதாக நான்கு வட்டாரங்கள் கூறியுள்ளன.
யேமன் நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் மேற்கத்திய நாட்டைச் சேர்ந்தவர் என இரு தரப்புத் தகவலாளர்கள், அந்தத் தொலைபேசி உரையாடலின்போது ட்ரம்ப் ஆதரவு அளிப்பதாக நேரடி உறுதிமொழி எதையும் அளிக்கவில்லை என்று கூறினர்.
மோதல்கள் தீவிரமடைந்ததிலிருந்து முதல் முறையாக, சனிக்கிழமையன்று ரியாத் நகரம் தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிகிறது.
விமான நிலையத்திற்கு அருகே வெடிச்சத்தங்கள் கேட்டதுடன் புகையும் காணப்பட்டது.
சவுதித் தலைநகர் மீது ஏவுகணைகளை ஏவியதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்; எனினும் சவுதி தரப்பிலிருந்து இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
2014 முதல் யேமனின் தலைநகரைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுத்திகள், சவுதி ஆதரவு பெற்ற அரசாங்கப் படைகளை முறியடித்து முன்னேறியதன் மூலம், இந்த மாதம் நாட்டின் செங்கடல் கடற்கரைப் பகுதியைக் கைப்பற்றினர்.
மலைப்பகுதிகளில் உள்ள போராளிகளின் நிலைகள் மீது சவுதி அரேபியா அண்மைய நாட்களில் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹவுத்திகள் கூறுகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின்படி, தீவிரமடைந்துள்ள மோதல்களில் சுமார் 700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
யேமனுக்குள்ளேயே சுமார் 1,30,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்; மேலும் 3,000-க்கும் மேற்பட்டோர் படகுகள் மூலம் செங்கடலைக் கடந்து ஆப்பிரிக்காவிற்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
செங்கடல் கடற்கரையை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்குப் பகுதியிலிருந்து பிரிக்கும் தைஸ் மற்றும் லாஹிஜ் ஆகிய இரண்டு மாகாணங்களில் உள்ள, கஹ்பூப் மலைகள் என அறியப்படும் முக்கியத்துவம் வாய்ந்த உயரமான பகுதிகளை ஹவுத்திகள் தற்போது கைப்பற்ற முயன்று வருவதாக ஐந்து யேமன் இராணுவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
தைஸ் மாகாணத்தில் உள்ள தொலைதூர மலைப்பகுதியான அல்-வஸியா மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளிலும், கடந்த வாரம் போராளிகளால் கைப்பற்றப்பட்ட செங்கடல் முகத்துவாரத்திற்கும் ஏடனில் உள்ள அரசாங்கத்தின் தளத்திற்கும் இடையேயுள்ள இந்தியப் பெருங்கடல் கடற்கரையோரப் பகுதியான ராஸ் அல்-அராவிலும் சண்டைகள் மையமாக நடைபெற்றுள்ளன.
சவுதி அரேபியாவுக்கும் ஹவுத்திகளுக்கும் இடையே சண்டை தீவிரமடைந்திருப்பது, வொஷிங்டனின் சவுதி நட்பு நாடுகளைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்ற அழுத்தத்தில் இருக்கும் ட்ரம்புக்கு ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், பெப்ரவரியில் ஈரானுக்கு எதிராக அவர் தொடங்கிய, மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய போரை மேலும் விரிவுபடுத்த வேண்டாம் என்றும் அவர் கவலைப்படுகிறார்.
2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கா இரண்டு மாதங்களுக்கு ஹவுத்திகள் மீது குண்டுவீச்சு நடத்தியது. ஆனால், அந்தக் குழுவுடன் போர்நிறுத்தம் ஏற்பட்ட பின்னர் ட்ரம்ப் அந்தத் தாக்குதல்களை இரத்து செய்தார், மேலும் அன்று முதல் இந்த மோதலில் இருந்து விலகியே இருந்து வருகிறார்.
பாப் அல்-மண்டேப் ஜலசந்தியின் மீது ஹவுத்திகள் புதிதாகக் கொண்டுள்ள கட்டுப்பாடு, ஹார்முஸ் நீரிணையில் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்த்து, சவுதி அரேபியா தனது எண்ணெய் ஏற்றுமதிக்காகப் பயன்படுத்தி வந்த முக்கிய மாற்றுப் பாதையைத் துண்டிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
இதற்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணை வழியாகச் சரக்குக் கப்பல் போக்குவரத்தை சவுதி அரேபியா அதிகரித்துள்ளது.
போர்க்கால அபாயங்களை எதிர்கொண்டு எண்ணெய் ஏற்றிச் செல்வதற்காக, சரக்கின் மதிப்பில் கால் பங்கு வரையிலான மிக அதிகக் கட்டணத்தை வசூலிக்கும் சில கப்பல்கள் அங்குத் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
பின்னர், ஆசியா அல்லது பிற பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு செல்லப்படும் வகையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள மற்ற கப்பல்களுக்கு அந்த எண்ணெய் மாற்றப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணைக்கு அப்பால் உள்ள ஓமன் கடற்பகுதியிலிருந்து ஏற்றுமதி செய்வதற்காக, இந்த மாதத்திலும் அடுத்த மாதத்திலும் தலா 60 மில்லியன் பீப்பாய் எண்ணெயை சவுதி அரேபியா விற்பனை செய்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகஸ்ட் மாதத்தில் 700,000 பீப்பாய்களாக இருந்த சவுதியின் ஹார்முஸ் வழி எண்ணெய் ஏற்றுமதி, அண்மைய நாட்களில் நாளொன்றுக்கு 2.9 மில்லியன் பீப்பாய்களாக அதிகரித்துள்ளதைச் செயற்கைக்கோள் தரவுகள் காட்டுகின்றன.
இது மசகு எண்ணெயின் உலகளாவிய விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவியுள்ளது.
கடந்த வாரம் ஒரு பீப்பாய் 110 அமெரிக்க டொலரை நெருங்கியிருந்த நிலையில், தற்போது அதன் விலை 100 அமெரிக்க டொலருக்கு அருகில் குறைந்துள்ளது.














