அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒரு விமானப்படைத் தளத்திற்கு அருகிலுள்ள வீடுகளிலிருந்து மக்களை வெளியேற்றியுள்ள காவல்துறையினர், வெடிபொருட்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த சந்தேகத்தின் பேரில் பலரைக் கைது செய்துள்ளனர்.
தென்மேற்கு இங்கிலாந்தின் வெல்ஃபோர்ட் (Whelford) பகுதியில் உள்ள பல வீடுகள் மற்றும் கட்டிடங்களில் வசிப்பவர்கள் அருகிலுள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வெடிபொருள் சட்டத்தின் கீழ் குற்றங்கள் புரிந்ததாகக் கருதப்படும் சந்தேகத்தின் பேரில் பல ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் இங்கிலாந்து காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின்போது தாக்குதல்களை நடத்த அமெரிக்கப் படைகள் பயன்படுத்திய ‘RAF ஃபேர்ஃபோர்ட்’ (RAF Fairford) எனும் விமானப்படைத் தளத்திற்கு அருகிலேயே இந்த நகரம் அமைந்துள்ளது.
அத்தளத்தின் நுழைவாயிலுக்கான பாதையை ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், நுழைவுப் பகுதிகளுக்கு முன்னால் உபகரணங்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை வாகனங்கள், அம்பியூலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட சுமார் 30 அவசரச் சேவை வாகனங்கள் அருகிலுள்ள ஃபேர்ஃபோர்ட் நகரில் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்தக் கைதுகளுக்குக் காரணமான சூழல் என்ன, வெடிபொருட்கள் ஏதேனும் கண்டெடுக்கப்பட்டனவா அல்லது சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் அந்த விமானப்படைத் தளத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை.
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்த, ‘RAF ஃபேர்ஃபோர்ட்’ (RAF Fairford) தளத்தைப் பயன்படுத்த அமெரிக்காவுக்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதி அளித்தது.
தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் எந்தவொரு தளமும் தாக்குதலுக்குரிய நியாயமான இலக்காகக் கருதப்படும் என்று ஈரானின் புரட்சிகரப் படை (Revolutionary Guards) கடந்த ஜூலை மாதம் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.













