ஏர்பஸ் (Airbus) விவகாரம் தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் பாசன் அமரசேன, நாமல் ராஜபக்ஷவை 500,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 30 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.
மேலும், நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்ததுடன், இந்தத் தடையை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டது.
கூடுதல் பிணை நிபந்தனையாக, சாட்சிகளைத் தலையிடவோ அல்லது அவர்களுக்கு இடையூறு விளைவிக்கவோ கூடாது என்றும் நீதவான் நாமல் ராஜபக்ஷவுக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை எயார் பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்ற இலஞ்சக் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் ஒரே நேரத்தில் இரு நீதிமன்றங்களில் வெவ்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இரு வழக்குகள் நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இதன் முதல் வழக்கு கொழும்பு நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷ வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இதற்கமைய கடந்த வழக்கு விசாரணையின்போது பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கை மீதான உத்தரவை நீதிவான் அசங்க எஸ். போதரகம அறிவித்திருந்தார்.
இதன்போது பிணைக் கோரிக்கையை நிராகரித்து எதிர்வரும் 13 ஆம் திகதிவரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையிலிலேயே இன்றையதினம் குறித்த வழக்கின் மற்றுமொரு விசாரணையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவித்துள்ளது.
இருந்தும் அவர் தொடர்ந்தும் 13ம் திகதி வரை சிறையில் இருக்க வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது













