பெனின் நகரிலிருந்து லாகோஸ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த நைஜீரிய இராணுவ விமானம் ஒன்று திங்களன்று (05) விபத்துக்குள்ளானதில் குறைந்தது 32 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய ஜனாதிபதி போலா டினுபு, விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு நைஜீரிய விமானப்படைக்கு உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட 32 பேரில் 25 பயணிகளும், ஏழு விமானக் குழுவினரும் அடங்குவர்.
விமானப்படைக்குச் சொந்தமான ATR-42 ரக விமானம் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை சுமார் 9 மணியளவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஃபெஸ்டஸ் கியாமோ (Festus Keyamo) கூறினார்.
பின்னர், கடற்படைத் தளத்திற்கு அருகிலுள்ள இக்போகோடா (Igbokoda) என்ற கடற்கரை நகரத்தின் அருகே அந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன.
அதனைத் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் குறித்த இடத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், உடனடித் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக விமானப்படை தெரிவித்தது.
அண்மைய காலங்களில் நைஜீரியாவில் நிகழ்ந்த மிக மோசமான விமான விபத்துகளில் இதுவும் ஒன்றாகும்.

















