நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் மழைக்கால வானிலையால் மொத்தம் 5,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
நிலையத்தின் அண்மைய அறிக்கையின்படி, மோசமான வானிலை நிலைமைகள் 166 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,594 குடும்பங்களைப் பாதித்துள்ளன.
மோசமான வானிலையால் எட்டு பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும் 12 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
வானிலை தொடர்பான அனர்த்தங்களால் நான்கு வீடுகள் முழுமையாகவும், 953 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அதேவேளையில், 12 மாவட்டங்களில் உள்ள 32 பிரதேச செயலகப் பிரிவுகளில் 47,583 குடும்பங்களைச் சேர்ந்த 156,756 பேர் வறட்சி நிலைமையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
பாதிக்கப்பட்ட 32 பிரதேச செயலகப் பிரிவுகளில் 28 பிரிவுகளில் குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேற்கொண்டுள்ளது.
இதுவரை 38,547 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 128,977 பேருக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.













