கடந்த மூன்றாம் திகதி கொழும்பில் மக்கள் போராட்ட இயக்கம் ஓர் எதிர்ப்பு ஆரப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது.”நியாயமற்ற வரிகளை நீக்குமாறும், வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் “அரசாங்கத்தை வலியுறுத்தி, ‘ஜன அரகல’ (மக்கள் போராட்ட) இயக்கம் கொழும்பில் எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தியது. பொரளை கம்ப்பெல் பூங்காவுக்கு அருகில் தொடங்கிய இந்தப் பேரணி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றது.
இந்தப் போராட்டத்தின்போது உரையாற்றிய ‘ஜன அரகல’ இயக்கத்தின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த முதலிகே, சாதாரண மக்கள் மீது பெரும் வரிச் சுமையைச் சுமத்தும் பொருளாதாரக் கொள்கைகளை அரசாங்கம் தொடர்ந்து பின்பற்றி வருவதாகக் குற்றம் சாட்டினார். வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்திற்கு முன்னதாக,அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுமாறு அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அரசாங்கம் எந்த அளவுக்கு வரிகளை உயர்த்தி உள்ளது என்பதனை சாதாரண மக்களின் நோக்கு நிலையில் இருந்து நாட்டு மக்களுக்கு விளங்கத்த கடிதத்தில் கவித்துவமாக கலைத்துவமாக ஓர் உதாரணத்தை சுட்டிக்காட்டியது. “அரசாங்கம் புரத வரியை உயர்த்தி உள்ளது” என்று சுட்டிக் காட்டிய அந்த அமைப்பானது, ஒரு கோழி முட்டைக்கு 11 ரூபாயும் கோழி இறைச்சி ஒரு கிலோவுக்கு 310 ரூபாயும் வரியாக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தொகுத்துக் காட்டியுள்ளது.
கோழி இறைச்சியும் கோழி முட்டையும் மக்களுடைய புரத தேவைகளை நிறைவேற்றுபவை. “மற்றைய நாடுகளோடு ஒப்பிடும்போது இலங்கையில் ஒரு மனிதர் வருடத்திற்கு 110 தொடக்கம் 120 முட்டைகளை மாத்திரமே பாவிக்கும் நிலை காணப்படுகின்றது இந்தத் தரவு மேற்கத்தேய நாடுகளுடன் ஒப்பிடும்போது இரண்டு தொடக்கம் மூன்று மடங்கு குறைந்த அளவாகும்”. என்று முகநூலில் ஓர் ஒப்பீடு காணப்பட்டது.
“கடந்த 20 ஆண்டுகளிலும் நாட்டில் அதிகரித்த வரி விதிக்கப்பட்டு இருப்பது இம்முறை தான்” என்று பன்னாட்டு நாணய நிதியத்தின் பிரதானி ஒருவரும் குறிப்பிட்டிருக்கிறார். பன்னாட்டு நாணய நிதியத்தின் அதிகாரிகள் நாட்டுக்கு வருகை தந்த போது நடந்த ஒரு ஊடகச் சந்திப்பில் அந்தப் பெண் பிரதானி அதனை சுட்டிக்காட்டியிருந்தார்.
“நாட்டின் கடன் சுமை குறைந்துள்ளதாக அரசாங்கம் வெளியிடும் புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் மற்றொரு தீவிரமான நிதி நெருக்கடி மறைந்திருப்பதாக” எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.”வெளிப்படையாகத் தெரியும் புள்ளிவிவரங்களை வைத்து நாட்டின் பொருளாதாரம் முழுமையாக நல்ல நிலைக்கு திரும்பிவிட்டதாக முடிவு செய்வது ஆபத்தானது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்….”வெளிநாட்டு நாணய பற்றாக்குறை 2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகவும் தீவிரமாக உணரப்படும்” என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து இந்த ஒக்டோபர் மாதத்தோடு மூன்றாவது ஆண்டு தொடங்குகிறது. அரசாங்கத்தில் இரண்டு ஆண்டுகால ஆட்சியில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி இம்மாதம் மூன்றாம் திகதி மேற் சொன்ன ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் கடந்த புதன்கிழமை உலக வங்கி வெளியிட்ட இலங்கை தொடர்பான ஆகப்பிந்திய அப்டேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களில் குறிப்பாக இரண்டு விடயங்களை இங்கே சுட்டிக் காட்டலாம்
“மேம்படுத்தப்பட்ட வழிமுறையைக் கையாண்ட பின்னர், பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையில் நிலவிய வறுமை குறித்த தனது மதிப்பீடுகளை உலக வங்கி திருத்தி குறைத்துள்ளது.இருப்பினும்,வறுமை ஏறக்குறைய இருமடங்காக அதிகரித்தது மற்றும் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டனர் என்ற பரந்த சித்திரத்தை இந்த புதிய புள்ளிவிவரங்கள் மாற்றவில்லை”என்றும் அது கூறுகிறது.
மேற்சொன்ன அடிப்படையில் “2026-ஆம் ஆண்டில், இலங்கையர்களில் ஐந்தில் இருவர் ஏழைகளாகவே நீடிப்பார்கள் அல்லது வறுமையில் வீழும் அபாயத்தில் இருப்பார்கள் என்றும்” உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
மேலும்,”இலங்கையில் குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய நிலை தொடர்ந்து அதிக விகிதத்தில் இருப்பது,பொருளாதார நெருக்கடியின் நீண்டகாலத் தாக்கத்தைக் காட்டுவதாக ” உலக வங்கியின் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
எனவே மேற்கண்ட அறிக்கைகள்,புள்ளிவிவரங்கள்,போராட்டங்கள் போன்றவற்றை தொகுத்து பார்க்கும் பொழுது என்ன தெரிகிறது? பொருளாதார நெருக்கடியின் தாக்கத்திலிருந்து இலங்கை முழுமையாக விடுபடவில்லை. இக்கட்டுரை எழுதப்படும் நாளிலும் யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் “க்யூஆர் கோட்” நடைமுறை பின்பற்றப்படுகிறது.அதாவது நாடு பொருளாதார ரீதியாக நெருக்கடியான நிலையை இன்னமும் கடக்கவில்லை என்று பொருள்.
எனினும்,அரசாங்கம் பொதுமக்களின் கவனத்தை, குறிப்பாக சிங்கள வெகு ஜனங்களின் கவனத்தைக் கெட்டித்தனமாக எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் எதிர்க் கட்சிகளின் காலத்தில் செய்யப்பட்ட குற்றங்களுக்கு எதிராகவும் குவி மையப்படுத்துவதில் வெற்றியடைந்து வருகிறது என்றுதான் தெரிகிறது.
மேற்சொன்ன தழும்பலான பொருளாதார நிலைமைகளுக்குள்ளும்,முன்னைய ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்ட குற்றங்களில் இனமுரண்பாடு சம்பந்தப்படாத எல்லா குற்றங்களுக்கும் எதிராக அரசாங்கம் துணிச்சலான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
கடந்த வாரம் ஞானசாரர் மீண்டும் சிறைக்குள் தள்ளப்பட்டார்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொது மன்னிப்பின் கீழ் அவர் வெளியே வந்தார்.இப்பொழுது நீதிமன்றம் அந்தப் பொது மன்னிப்பை ரத்து செய்திருக்கிறது.
ஞானசாரர் பொது மன்னிப்பு பெற்ற தண்டனை எதற்கானது என்பதையும் இங்கு குறிப்பாகக் கவனிக்க வேண்டும்.அது ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆகும்.காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு.அந்த வழக்கில்தான் ஞானசாரர் நீதிமன்றத்தை அவமதித்தார்.அதன் விளைவாகத்தான் அவருக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.இப்பொழுது அவருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை நீக்கி தண்டனை மீண்டும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
பிரகீத் எக்னலிகொடவின் மனைவியாகிய சந்தியா, “இன்றைய நாள் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளாகும். நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு ஜனாதிபதிகள் தங்களது விருப்பம்போல ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க முடியாது என்று உயர் நீதிமன்றம் 2026/09/10 அன்று வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு நடைமுறைக்கு வந்த நாள் இன்றாகும்.இத்தீர்ப்பானது நாட்டின் சட்டத்தையும்,நீதித்துறையின் சுயாதீனத்தையும் வெற்றிபெறச் செய்துள்ளது.நாட்டின் சட்டத்தைப் பலப்படுத்துவதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடிந்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்” என்று பாராட்டியுள்ளார்.
அதுமட்டுமல்ல மீண்டும் சிறைக்குள் தள்ளப்பட்ட ஞானசாரரின் காவி உடை களையப்பட்டு வழமையான கைதிகளுக்குரிய உடை கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் ஒரு விவகாரமாக அவருடைய தரப்பு மேலே கொண்டு வருகிறது. மகா நாயக்கர்கள்தான் பிக்குக்களின் காவி உடையைக் களையலாம் என்றும் ஞானசாரருடைய தரப்பு கூறுகிறது.ஆனால் ஏற்கனவே போதைப் பொருள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய பிக்குகளும் உட்பட இலங்கைத் தீவில் இதுவரை பலபிக்குகள் அவ்வாறு காவி வஸ்திரம் களையப்பட்டு கைதிகளின் உடைகளோடு சிறைகளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். எனினும் ஞானசாரரின் விடையத்தில் அது ஒரு விவகாரமாக மாற்றப்பட்டிருக்கிறது.
ஞானசாரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை நீக்கியதன்மூலம் அரசாங்கம் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் அந்தஸ்தை உயர்த்தியிருக்கிறது என்பது உண்மை.அனைத்துலக அளவில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்குள்ள நம்பகத்தன்மையைப் பலப்படுத்த அது உதவும். ஞானசாரர் கைது செய்யப்பட்ட பின்னர் சிராந்தி ராஜபக்சவும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.நாட்டின் முன்னாள் முதல் பெண்மணி அவர். யுத்த வெற்றி நாயகரின் மனைவியும் அவர்.ராஜபக்ச குடும்பத்தின் மூத்த பெண்மணி ஒருவர் அவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை வெளிநாடுகளில் பலப்படுத்த உதவும்.
ஆனால் இங்கே தமிழ் நோக்குநிலையில் எங்கே உதைக்கிறது என்றால்,உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை வெளிநாடுகளில் அனைத்துலக அளவில் பலப்படுத்தும் நோக்கத்தோடு, அரசாங்கம் உள்நாட்டில் முன்னெடுத்துவரும் சட்ட நடவடிக்கைகள்,கைது நடவடிக்கைகள்,விசாரணை நடவடிக்கைகள் போன்ற எல்லாவற்றின் பின்னணியில்,கடந்த வாரம் அதாவது இந்த மாதம் ஆறாம் திகதி “பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான” புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முதலாவது வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்.
ஏற்கனவே நான்கு தசாப்தங்களுக்கு மேலாக பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் ஆட்சி செய்து வந்த சிங்கள பௌத்த அரசாட்சிப் பாரம்பரியத்தை, மாற்றத்தை வாக்களித்து வந்த தேசிய மக்கள் சக்தியாலும் மாற்ற முடியவில்லை என்பதைத்தான் அது காட்டுகிறதா? பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற ஒன்று இல்லாமல் நாட்டை ஆள முடியாது என்று தேசிய மக்கள் சக்தி நம்புகின்றதா ?
அப்படியென்றால் எதிர்கட்சியாக இருந்த காலத்தில் தமிழ்த் தரப்புக்களுடன் இணைந்து வடக்கில் இருந்து அம்பாந்தோட்டை வரையிலும் பயங்கரவாத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்துக்களைச் சேகரித்த ஜேவிபி எங்கே? இங்கு மாற்றம் என்பது ஜேவிபியில் ஏற்பட்ட மாற்றமா? அல்லது சிங்கள பௌத்த அரசாட்சியில் ஏற்பட்ட மாற்றமா?
தமிழ் மக்கள் கேட்கும் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை நிராகரிக்கின்ற அரசாங்கம்,அந்தக் கோரிக்கையைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையைப் பலப்படுத்தி வருகின்ற ஓர் அரசாங்கம்,அந்த உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்குள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய “வேர்சனை” இணைப்பது எதைக் காட்டுகிறது? ஆட்சி முறை மாறிவிட்டது என்பதையா? அல்லது ஜேவிபி மாறிவிட்டது என்பதையா?












