நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளதன் காரணமாக, இலங்கையில் இன்றும் (20) மின்வெட்டு தொடரும்.
தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு மையத்தின் (National System Operator – NSO) கோரிக்கையை ஏற்று, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) நேற்று (19) தெரிவித்துள்ளது.
இதற்கேற்ப, நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் நான்கு மண்டலங்களாகப் பிரித்து, மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
இருப்பினும், வைத்தியசாலைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் இடங்களுக்கு மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
கடந்த சனிக்கிழமை நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலையில் உள்ள லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் தற்போது செயல்பாட்டில் இல்லை.
இதற்கமைய, மின்சார விநியோகத்தைச் சீர்செய்யும் நோக்கில், தினமும் ஒரு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு மையம் நேற்று தீர்மானித்தது.
நேற்றும் நாடு முழுவதும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
இன்றும் நாளையும் (21) இதே நடைமுறை அவசியமென தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு மையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி புத்திக சமரசேகர தெரிவித்துள்ளார்.














