மைக்ரோசோப்ட் (MSFT.O) நிறுவனம், தனது உலகளாவிய பணியாளர்களில் கால் பங்கிற்கும் அதிகமான, சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்பத்தின் பேரில் பணியிலிருந்து விலகும் திட்டத்தை (voluntary buyouts) வழங்குவதாக திங்கள்கிழமை (26) அறிவித்துள்ளது.
செலவுகளைக் கட்டுப்படுத்தவும், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் மேற்கொள்ளப்படும் பிரம்மாண்டமான முதலீடுகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டவும் இந்த நடவடிக்கையை அந்தத் தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
AI அனுபவங்கள், கோபைலட், நிதி, மனிதவளம், எக்ஸ்பாக்ஸ் மற்றும் விண்டோஸ் + டிவைசஸ் ஆகிய துறைகளில் பணிபுரிபவர்கள் உட்பட, விண்டோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் இந்தச் சலுகைகளுக்குத் தகுதி பெறுவார்கள் என்று இவ் விவகாரத்தை நன்கு அறிந்த நிறுவனத்தின் வட்டாரங்கள் கூறியுள்ளன.
சந்தைப்படுத்தல், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்ற பிரிவுகள் இந்த சலுகையிலிருந்து விலக்கப்படும் என்றும் அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.
ஏனைய தொழில்நுட்ப ஜாம்பவான்களைப் போலவே, மைக்ரோசோப்டும் செயற்கை நுண்ணறிவு தரவு மையங்கள் மற்றும் சிப்களுக்காக நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களைச் செலவழித்து வருகிறது.
இந்த மலை போன்ற செலவிற்கு கிடைக்கும் வருமானம் நியாயமானதாக இருக்குமா என்பது குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் இது ஒரு விமர்சனக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை (28) சந்தைகள் முடிந்த பிறகு முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ள இந்நிறுவனம், 2026 ஆம் ஆண்டுக்கான மூலதனச் செலவினமாக 175 பில்லியன் டொலர்களைக் கணித்துள்ளது.
மைக்ரோசோப்ட் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையின்படி, 2026 ஜூன் 30, நிலவரப்படி, அந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் 223,000 முழுநேர ஊழியர்கள் பணிபுரிந்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அந்நிறுவனம் தனது அமெரிக்க பணியாளர்களில் சுமார் 7% பேருக்கு, அதாவது ஏறத்தாழ 9,000 ஊழியர்களுக்கு, விருப்பத்தின் பேரில் பணியிலிருந்து விலகும் திட்டத்தை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

















