இந்திய மத்திய தொலைத்தொடர்புத் துறையின் புதிய விதிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதன்படி, சிம் அட்டை இல்லாவிட்டால் வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகள் இயங்காது.
இந்தியாவில் சுமார் 131 கோடிக்கும் அதிகமான சிம் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. நாடு முழுவதும் சுமார் 80 கோடிக்கும் மேற்பட்டோர் திறன்பேசிகளைப் பயன்படுத்துகின்றனர். சுமார் 50 கோடிக்கும் மேற்பட்டோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக இணையவழிக் குற்றங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.
2023ஆம் ஆண்டில் இணையவழி மோசடிகள் தொடர்பாக நாடு முழுவதும் 13.1 இலட்சம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் சுமார் 7,465 கோடி இந்திய ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
2024ஆம் ஆண்டில் இணையவழி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 19.2 இலட்சமாக அதிகரித்தது. 2025ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24 இலட்சமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சுமார் 22,495 கோடி இந்திய ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலான இணையவழி மோசடிக் கும்பல்கள், சிம் அட்டையைப் பயன்படுத்தாமல் இணைய இணைப்பை மாத்திரம் பயன்படுத்தி, வாட்ஸ்அப் அழைப்புகள் அல்லது தகவல்களை அனுப்புவதன் மூலம் மக்களை ஏமாற்றி வருகின்றன.
இதற்குத் தீர்வுகாணும் வகையில், இந்திய மத்திய தொலைத்தொடர்புத் துறை புதிய வழிகாட்டல் விதிகளை (SIM Binding) வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.
இதன்படி, சிம் அட்டை இல்லாமல் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், ஸ்னாப்சாட், ஷேர் சாட், ஜியோ சாட், அரட்டை மற்றும் ஜோஸ் ஆகிய எட்டு செயலிகளும் இயங்காது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் சிம் அட்டை இணைப்பு தொடர்பான விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என இந்திய மத்திய அரசு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் இணையவழி மோசடிகளில் ஈடுபடுவோரைக் கண்டறிவது இலகுவாகும் என்றும், இணையவழிக் குற்றங்கள் கணிசமாகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


















