புது டெல்லியில் நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) முதல் ‘நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மன்றத்திற்கு’ (Civilisational Dialogue Forum), பாகிஸ்தானின் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஔரங்கசீப் கான் கிச்சியை (Aurangzeb Khan Khichi) இந்தியா அழைத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மன்றத்திற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள அனைத்து 10 உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, 2025 மே மாதம் இந்தியா மேற்கொண்ட ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) நடவடிக்கையினால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவுகள் பதற்றமடைந்திருக்கும் சூழலில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தானின் மூத்த அமைச்சர் ஒருவருக்கு விடுக்கப்பட்ட முதல் அழைப்பு இதுவாகும்.
கிச்சி இதில் கலந்துகொண்டால், 2023 மே மாதம் கோவாவில் நடைபெற்ற SCO வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சில் கூட்டத்தில் அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி பங்கேற்றதற்குப் பின்னர், பாகிஸ்தானின் மூத்த அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் வருகையாக இது அமையும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பெலாரஸ், சீனா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 10 உறுப்பு நாடுகள் உள்ளன.
இந்தியா 2017-ல் முழு உறுப்பினரானது.
ஆப்கானிஸ்தான் மற்றும் மங்கோலியா பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
அதே நேரத்தில் இந்த அமைப்பில் 15 உரையாடல் பங்காளிகளும் உள்ளனர்.


















