பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக இலங்கை அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அந்த அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸ்ஸங்க, காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளாததால், இந்தத் தொடரில் இடம்பெற மாட்டார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஐசிசி செய்திச் சேவையின் தகவலினப்டி, நவம்பர் 9-ஆம் திகதி ராவல்பிண்டியில் தொடங்கவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக பத்தும் நிஸ்ஸங்கவுக்குப் பதிலாக லஹிரு உதார அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பத்தும் நிஸ்ஸங்க இந்தத் தொடருக்கான இலங்கை அணியின் ஆரம்பகட்ட டெஸ்ட் குழாமில் உடல் தகுதிச் சான்றிதழுக்கு உட்பட்டு சேர்க்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், இந்தத் தொடருக்குள் அவரால் முழுமையாகக் குணமடைய முடியவில்லை.
இந்தக் காயத்தின் காரணமாக, பாகிஸ்தானில் நடைபெற்ற டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடனான ஒருநாள் முத்தரப்புத் தொடர் உள்ளிட்ட அண்மையில் இலங்கை அணி பங்கேற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளிலும் அவரால் விளையாட முடியாமல் போனது.
குறிப்பிட்ட அந்த முத்தரப்பு தொடரில், இங்கிலாந்துக்கு எதிராக, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே இரண்டாவது மிக உயர்ந்த இலக்கை வெற்றிகரமாகத் துரத்திக் கடக்கும் சாதனையை இலங்கை அணி அண்மையில் நிகழ்த்தியது.
இதற்கிடையில், முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள உதார, அந்தத் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் அணியிலும் இணைந்து கொள்வார்.
அவர் இதற்கு முன்பும் இலங்கை அணிக்காக டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் போது, அவர் தனது டெஸ்ட் வாழ்க்கையிலேயே மிகச்சிறந்த ஓட்ட எண்ணிக்கையை (188) எடுத்திருந்தார்.
குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை நவம்பர் 9-ஆம் திகதி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 17-ஆம் திகதி லாகூரில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.















