முல்லைத்தீவு மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் தனித்தனிச் சம்பவங்களில் காணாமல் போன ஏழு மீனவர்களைக் கண்டறிய இலங்கை கடற்படை தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
கடற்படைப் பேச்சாளரின் தகவல்படி, ஒக்டோபர் 26 அன்று முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பிலிருந்து கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போனதாக, அவர்களின் படகு உரிமையாளர் செவ்வாய்க்கிழமை (27) தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கடற்படையினர் ஒரு கப்பலை அனுப்பி தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மேலும், இலங்கை விமானப்படையின் உதவியும் கோரப்பட்டது.
இதற்கமைய, காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணிக்கு உதவும் வகையில், இன்று ‘பெல் 212’ (Bell 212) ரக ஹெலிகொப்டர் ஒன்று பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இதேவேளை, ஒக்டோபர் 21 அன்று மாத்தறை, குடவெல்லயிலிருந்து கடலுக்குச் சென்ற நான்கு மீனவர்களும் காணாமல் போனதாக, அவர்களின் படகு உரிமையாளர் செவ்வாய்க்கிழமை (27) அறிவித்தார்.
இது குறித்து கொழும்பிலுள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூடுத் தேடுதல் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
காணாமல் போன மீனவர்களைத் தேட கடற்படைக் கப்பல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதுடன், இலங்கை விமானப்படையின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
காணாமல் போன ஏழு மீனவர்களைக் கண்டறியும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

















