வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிறுவனங்களின் பணிப்பாளர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு, வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி பணத்தைப் பெற்றுக்கொண்டு, குறித்த வீடுகளைப் பகுதியளவில் நிர்மாணித்த பின்னர், பணம் தொடர்பில் குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் மோசடியில் ஈடுபட்டமை தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய, குறித்த பண மோசடி தொடர்பில் நேற்றைய (27) தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆண் சந்தேக நபருக்கு 27 வயதும், சந்தேக நபரான பெண்ணுக்கு 19 வயதும் ஆகும்.
இவர்கள் பூகொட மற்றும் தொம்பே பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்கள் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி, இவ்வாறு மொத்தமாக 38,770,000 ரூபா (மூன்று கோடியே எண்பத்தேழு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா) பணத்தைப் பெற்றுக்கொண்டு, வீடுகளைப் பகுதியளவில் நிர்மாணித்த பின்னர், பணம் தொடர்பில் குற்றவியல் நம்பிக்கை மீறலில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நிதி மற்றும் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













