வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, இன்று (01) அதிகாலை 5.30 மணியளவில் குறித்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று முற்பகல் 11.30 மணியளவில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் அதனை அண்மித்த மேற்கு மத்திய பகுதிகளில் புயலாக வலுப்பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடற்பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
இதனால் குறித்த கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்லும் பல நாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் அவதானத்துடன் செயற்படுமாறும், அறிவுறுத்தப்பட்ட கடற்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக, வட அகலாங்கு 10 முதல் 15 வரையிலும் கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 90 வரையிலும் அமைந்துள்ள கடற்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மறு அறிவித்தல் வரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கடற்படை மற்றும் மீன்பிடிச் சமூகத்தினர் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த எச்சரிக்கை இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும்.















