முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்கான இலங்கையின் செலவு 51.5% அதிகரித்து, 4,487.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
அரசாங்கத்தின் அண்மைய புள்ளிவிவரங்களின்படி, 2025-ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை 2,961.3 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டுள்ளது.
இது, முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இறக்குமதிச் செலவில் 1,525.9 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பைக் காட்டுகிறது.
இருப்பினும், 2026 செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் இறக்குமதிச் செலவு, 2025 ஆம் ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் சரிவைக் கண்டுள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 415.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இது 2025 செப்டம்பர் மாதத்தில் 440.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், தற்போது 25.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 5.8 சதவீதம் குறைந்துள்ளது.
இதற்கிடையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நிகர விற்பனை வருவாயில் 40.4% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிகர விற்பனை வருவாய் ரூ. 576.6 பில்லியனாக உயர்ந்துள்ளது.
இது 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 410.7 பில்லியனாகப் பதிவாகியிருந்தது.
2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதிக்கட்டத்தில் மத்திய கிழக்கில் பதற்றங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, உள்நாட்டில் எரிபொருள் விலைகள் உயர்ந்த சூழலில், வருவாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
புவிசார் அரசியல் சூழலானது, ஹார்முஸ் நீரிணை வழியாக பெற்றோலியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதன் மீதான கட்டுப்பாடுகள் உட்பட, உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலிகளில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளும், கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவுகளும் கணிசமாக உயர்ந்துள்ளன.
இது சர்வதேச எரிசக்தி சந்தைகளின் மீது கூடுதல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














