எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைத்தல், விற்பனையைக் கட்டுப்படுத்தல் அல்லது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் முகவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் எச்சரித்துள்ளது.
எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைப்பது, விற்பனையைக் கட்டுப்படுத்துவது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறுவது அல்லது அங்கீகரிக்கப்படாத கூடுதல் கட்டணங்களை விதிப்பது போன்ற செயல்களில் இருந்து அனைத்து லிட்ரோ கேஸ் விற்பனையாளர்களும் கண்டிப்பாக விலகி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் ஒரு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த அறிவுறுத்தல்களைப் புறக்கணிக்கும் அல்லது மீறும் விற்பனையாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் அவர்களின் விற்பனை உரிமைகள் இரத்து செய்யப்படும் என்றும் லிட்ரோ கேஸ் லங்கா வலியுறுத்தியுள்ளது.
நுகர்வோர், அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விலையில் லிட்ரோ கேஸை தடையின்றிப் பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.













