நாட்டின் 76 வருட கால சேவைகள் பற்றிக் குறிப்பாகக் கூற வேண்டி தேவையில்லாத போதும், மக்கள் விடுதலை முன்னணியின் 2 வருட அடக்குமுறை மற்றும் அழுத்தமான அரச கொள்கைக்குள் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பெரும் அழுத்தங்களுக்கும், துயரங்களுக்கும் அவலங்களுக்கும் ஆளாகியுள்ளனர்.
நாட்டில் வறுமை தற்சமயம் அதிகரித்துள்ள போதிலும், வறுமையை இல்லாதொழிப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த விவசாயியின் மகனாலும் அதைக் குறைக்க முடியாமல் போயுள்ளது. நெல் ஒரு கிலோவிற்கு ரூபா 150 என்ற உத்தரவாத விலையை நாட்டின் சட்டதிட்டங்கள் மூலம் பெற்றுத் தருவோம் என்றும் கூறினர், இன்றும் அது நிறைவேற்றப்படவில்லை.
ஒரு கிலோ நெல் உற்பத்திக்கு ரூபா 137 செலவாகின்றன என்று விவசாய அமைச்சரே கூறிவிட்டு, இன்று நெல் ஒரு கிலோவிற்கு ரூபா 120 என்ற உத்தரவாத விலையே மெற்றுத் தரப்படுகின்றது. இந்த அரசாங்கத்தினால் அந்த நிலையான விலையைக் கூட பெற்றுத் தர முடியாமல் போயுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எந்தவொரு அரசாங்கமும் விவசாயியின் அறுவடையில் 100% ஐக் கொள்வனவு செய்ததில்லை என்றாலும், எஞ்சிய நெல்லை நுண் மற்றும் சிறிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களே கொள்வனவு செய்து வருகின்றனர். அரசாங்கம் அறிவிக்கும் நிலையான விலை என்பது வெறும் செய்தித் தலைப்பாக இருக்கக் கூடாது, மாறாக நடைமுறை யதார்த்தமாக அமைந்து காணப்பட வேண்டும்.
இந்த அரசாங்கம் தொடங்கியது முதல் பொய்களைச் சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளதே தவிர மக்களுக்குச் சேவை செய்த பாடில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்சமயம் துறைமுகத்தில் இறக்கப்படும் விலையில் எரிபொருள் கிடைத்தபாடில்லை. 33% ஆல் மின்சார கட்டணம் குறைக்கப்படவுமில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டு வருகின்றன.
விவசாயம் மற்றும் பெருந்தோட்டத் தொழில்கள் கூட வீழ்ச்சியடைந்துள்ள நமது நாட்டின் அரச கொள்கையானது, சட்டதிட்டங்கள் ஊடாக மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதாகவே மாறியுள்ளன. மக்களுக்கு அரசியல் செய்வதற்கான உரிமைகள் கூட தற்சமயம் முற்றிலுமாக நீக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மக்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறி புதிய சட்டங்கள் மூலம் கூட்டங்களை நடத்துவது, அரசியல் கருத்துக்களைத் தெரிவிப்பது, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களைச் செய்வது போன்ற உரிமைகளைக்கூட இல்லாமல் செய்து, அரச பயங்கரவாதத்தை நாட்டின் சட்டமாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டம், மின்னேரியா தேர்தல் தொகுதி, அத்தனகடவல கோதுருவாவ கிராமத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க விசேட வேலைத்திட்டத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை மற்றும் துப்பாக்கிப் பிரயோகம் மூலம் மக்களை அடக்குவதற்குப் பதிலாக, நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் அதிகாரத்தை அதிகரித்து, ஜனாதிபதியின் அதிகாரத்தை அதிகரித்து மக்களை அடக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபை முதல் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் வரை இதற்கு எதிராக சர்வதேச அளவில் கூட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கத்திற்குத் தப்பியோட வழி இந்த அடக்குமுறையே என்பதால், அரசாங்கம் தொடர்ந்தும் ஜனநாயக உரிமைகளை மீறி, அரசை மக்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
















