தெனியாய, பெவரலிய பகுதியில் அமைந்துள்ள ‘கலேதொல’ என்ற நீரோடையில் நீராடச் சென்ற இளைஞர்கள் நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், அவர்களில் மூவர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் கணினி நிறுவனமொன்றில் பணியாற்றும் ஏழு இளைஞர்கள், நேற்று (07) தெனியாய, பெவரலிய பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இதன்போது அவர்களில் ஆறு பேர் குறித்த நீரோடையில் நீராடச் சென்ற நிலையில், நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இதனையடுத்து காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கடற்படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், இன்று (08) முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது முற்பகலில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டதுடன், பிற்பகலில் மேலும் ஒருவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள மற்றைய இளைஞரையும் தேடும் பணிகள் கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













