சர்வதேச சந்தையில் திங்கட்கிழமை (09) வர்த்தகத் தொடக்கத்தில் மசகு எண்ணெய் விலை சரிந்தது.
ஹார்முஸ் நீரிணைப்பிலோ அல்லது அதன் அருகிலோ கப்பல்கள் தாக்கப்பட்டதாக இரு நாடுகளும் தெரிவித்திருந்த போதிலும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், ஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்படி, GMT 01.38 மணி நிலவரப்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாயொன்றுக்கு 84 சென்ட்கள் அல்லது 0.85% சரிந்து 97.48 டொலராக இருந்தது.
அதே சமயம் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் பீப்பாயொன்றுக்கு 32 சென்ட்கள் அல்லது 0.35% சரிந்து 90.51 டொலராக இருந்தது.
ஈரான் மீது அமெரிக்கா மேலும் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற சாத்தியக்கூறுகளைச் சந்தை மதிப்பீடு செய்த நிலையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஏற்பட்ட சிறிய அளவிலான லாபங்கள் இந்த வீழ்ச்சியால் இல்லாமற்போயின.
அதே சமயம், கடந்த வாரம் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 17% சரிந்தது.
இது கொவிட் பெருந்தொற்று தொடங்கிய காலத்திற்குப் பிந்தைய மிகப்பெரிய வாராந்திர சரிவு மட்டுமல்லாமல், 1988-ஆம் ஆண்டு வரையிலான LSEG (லண்டன் பங்குச் சந்தைக் குழுமம்) தரவுகளின்படி, முழுமையான அளவீட்டின் அடிப்படையில் மிக முக்கியமான சரிவுமாகும்.
கடந்த வார அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்குப் பின்னர் ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்து ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்திருந்தார், ஆனால் பெரிய அளவிலான அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளைத் தாக்குவதன் மூலம் பதிலடி கொடுப்போம் என்று ஈரான் கூறியுள்ளது.
மீண்டுவரும் மத்திய கிழக்கு எண்ணெய் வரத்து, பிற நாடுகளின் அதிகரித்து வரும் உற்பத்தி மற்றும் பலவீனமான தேவை ஆகியவற்றால் உலகளாவிய விநியோகம் நுகர்வை விட அதிகமாக உள்ளதால், எண்ணெய் மீண்டும் உபரி நிலையை நோக்கிச் செல்கிறது என்று ஜேபிமோர்கன் ((அமெரிக்காவின் பன்னாட்டு நிதிச் சேவை மற்றும் முதலீட்டு வங்கிக் குழுமம்). வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செப்டம்பரில் ஒரு நாளைக்கு 1.1 மில்லியன் பீப்பாய்கள் உபரி இருக்கும் என்றும், அக்டோபரில் இது 1.4 மில்லியன் பீப்பாய்களாக அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, ஓமானுக்கு அருகிலுள்ள ஒரு கப்பல் வழித்தடம் வழியாக ஹார்முஸ் நீரிணை மூலம் ஈராக்கிய எண்ணெய் ஏற்றுமதியை அனுமதிக்க அமெரிக்காவுடன் ஈராக் ஒரு புரிந்துணர்வை எட்டியுள்ளது என்று வெளியுறவு அமைச்சர் ஃபுவாட் ஹுசைன் அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
ஈரான் போர் மற்றும் எண்ணெய் ஏற்றுமதியில் ஏற்பட்ட இடையூறுகளால் ஈராக்கிற்கு ஏற்பட்ட இழப்புகள் 60 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை தலைநகர் ரியாத்தில் உள்ள சவூதி அராம்கோ அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹவுத்திகள் பொறுப்பேற்றனர்.
இந்தத் தாக்குதலில் ஜன்னல்கள் உடைந்தன, ஆனால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.














