2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வழங்கப்பட்ட பல்வேறு வரிச் சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் காரணமாக, நான்கு வகையான மறைமுக வரிகளின் ஊடாக அரசுக்கு ரூ. 461.49 பில்லியன் வரி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பெறுமதி சேர் வரி (VAT) சலுகைகள் காரணமாக ரூ. 242.95 பில்லியனும், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) சலுகைகள் காரணமாக ரூ. 135.27 பில்லியனும் வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சுங்க இறக்குமதி வரி சலுகைகள் மூலம் ரூ. 74.25 பில்லியன் வருமானம் இழக்கப்பட்டுள்ளதுடன், இதில் 89.8 சதவீதம் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 19(அ) பிரிவின் கீழ் பொது நோக்கங்கள் மற்றும் விசேட திட்டங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளால் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, விசேட ஏற்பாடுகளின் கீழான உற்பத்தி வரிச் சலுகைகளால் ரூ. 9.02 பில்லியன் வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இதில் 99.8 சதவீதம், அதாவது ரூ. 9,005 மில்லியன், உள்நாட்டில் பொருத்தப்படும் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட வரி விலக்குகளால் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மறைமுக வரிகளுக்கு மேலதிகமாக, நேரடி வரிகள் ஊடாக இழக்கப்படும் வருமானமும் கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதற்கமைய, 2023/24 மதிப்பீட்டு ஆண்டில் ரூ. 119.29 பில்லியனாக இருந்த நிறுவன வருமான வரி (Corporate Income Tax) இழப்பு, 2024/25 ஆண்டில் 26 சதவீதத்தால் அதிகரித்து ரூ. 186.07 பில்லியனாக உயர்ந்துள்ளது.
மேலும், தனிநபர் வருமான வரி (Personal Income Tax) சலுகைகளால் ஏற்பட்ட வருமான இழப்பு 2023/24 ஆண்டில் ரூ. 10.46 பில்லியனாக இருந்த நிலையில், 2024/25 ஆண்டில் ரூ. 36.28 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது 246.8 சதவீதம் என்ற பாரிய அதிகரிப்பாகும்.
முதலீடுகளை ஊக்குவித்தல், ஏற்றுமதி அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட கொள்கை ரீதியான நோக்கங்களுக்காகவே இந்த வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், இதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் குறைவடைவதால், இந்தச் சலுகைகளின் நிதி ரீதியான தாக்கங்கள் மற்றும் கொள்கை ரீதியான நன்மைகள் குறித்து தொடர்ச்சியான மதிப்பாய்வுகளை மேற்கொள்வது அவசியம் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.














