2023 ஒக்டோபர் 7, அன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் திட்டமிடவும், மேற்பார்வையிடவும் உதவிய ஹமாஸின் ஆயுதப் பிரிவைச் சேர்ந்த மூத்த தளபதி ஒருவர், தெற்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததை அந்த அமைப்பு ஞாயிற்றுக்கிழமை (15) உறுதிப்படுத்தியது.
கொல்லப்பட்ட தளபதியின் பெயர் சமீர் அபு யூனிஸ் (53) என்றும், அவர் அதன் ரஃபா பிரிகேட்டிற்குத் தலைமை வகித்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சனிக்கிழமையன்று கான் யூனிஸில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், ஹமாஸின் மூத்த இராணுவத் தளபதி ஒருவரை இலக்கு வைத்ததாக இஸ்ரேலிய இராணுவமும் ஷின் பெட் பாதுகாப்பு அமைப்பும் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தன.
இருப்பினும், அந்தத் தளபதியின் அடையாளம் அதில் குறிப்பிடப்படவில்லை என்று அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
கான் யூனிஸின் மவாசி பகுதியில் உள்ள ஒரு தெருவில் அபு யூனிஸை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
ஹமாஸின் கூற்றுப்படி, அபு யூனிஸ் 1991-ல் அதன் ஆயுதப் பிரிவில் இணைந்தார்.
அவர் ரஃபாவில் பல முக்கிய செயல்பாட்டுப் பொறுப்புகளை வகித்த பிறகு, அந்தப் படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
அவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கான் யூனிஸில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது.
காசாவில் பெரும் மோதல்களை நிறுத்திய 2025 ஒக்டோபர் போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் இஸ்ரேலியத் தாக்குதல்களையோ அல்லது ஹமாஸின் ஆயுதங்களைக் களைவதையோ உறுதிப்படுத்தவில்லை.
போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து குறைந்தது 1,600 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதே காலகட்டத்தில் ஐந்து இஸ்ரேலிய வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
2023 ஒக்டோபர் 7, அன்று ஹமாஸ் தலைமையிலான போராளிகள் தெற்கு இஸ்ரேலில் சுமார் 1,200 பேரைக் கொன்றதைத் தொடர்ந்து, இஸ்ரேல் காசாவில் தொடங்கிய இராணுவ நடவடிக்கையில் 74,000-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
















