அக்வான் புயலுடன் தொடர்புடைய காற்றின் திசை மாற்றம் காரணமாக, எதிர்வரும் சில நாட்களில் இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைவதுடன், பனிமூட்டம் கலந்த மங்கலான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது அவதானிக்கப்படும் வழக்கத்திற்கு மாறான மங்கலான வானிலைக்கு, அக்வான் புயலின் தாக்கத்தினால் இந்தியாவிலிருந்து இலங்கையை நோக்கி வீசும் காற்றே காரணம் என திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வளிமண்டல நிலைமைகள் காரணமாக, எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிக்கப்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் மங்கலான வானிலை அதிகமாகக் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன், சில சந்தர்ப்பங்களில் பிற்பகல் வேளைகளிலும் இத்தகைய நிலைமை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பனிமூட்டத்துடன் இந்த மங்கலான வானிலை நிலவக்கூடும் என்பதால், வீதிகளில் பார்வைத்திறன் குறைவடைய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இவ்வாறான வானிலை நிலவும் காலப்பகுதியில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.














