இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் இலங்கை அணியைத் துடுப்பெடுத்தாடப் பணித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 98 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணித்தலைவர் குசல் மெண்டிஸ் 32 ஓட்டங்களையும், சோனல் தினுஷ 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் சார்பில் மொஹமட் அப்பாஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 325 ஓட்டங்களைக் குவித்து, 227 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
காஸி கோரி 54 ஓட்டங்களையும், அசான் அவைஸ் 47 ஓட்டங்களையும், தையாப் ஆரிப் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 5 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி 316 ஓட்டங்களைப் பெற்றது. மிலன் ரத்நாயக்க ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும், சோனல் தினுஷா 54 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் சார்பில் மொஹமட் அப்பாஸ் மற்றும் ஆமிர் ஜமால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்படி, வெற்றிபெற 90 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, 13 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
ஆமிர் ஜமால் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும், அசான் அவைஸ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன் மூலம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது.

















