இலங்கையின் பல்வேறு சந்தைகளில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு வெங்காயம் மற்றும் முட்டையின் விலைகள் கடந்த வாரத்தில் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கியினால் கடந்த இரண்டு வாரங்களில் வெளியிடப்பட்ட வாராந்த பொருளாதாரக் குறிகாட்டிகள் அறிக்கைகளில் இந்த விலை மாற்றங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதன்படி, பேலியகொடை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகப் பகுதிகளில் ஒன்றான புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் உள்நாட்டு சிவப்பு வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை நவம்பர் 13 ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 527.60 ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், நவம்பர் 20 ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 675 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, ஒரே வாரத்தில் 147.40 ரூபாவினால், அதாவது சுமார் 27.9 சதவீதத்தினால் சிவப்பு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
அதேவேளை, புறக்கோட்டை சந்தையில் வெள்ளை முட்டையொன்றின் சராசரி சில்லறை விலை 37.68 ரூபாவிலிருந்து 41.75 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. இது 4.07 ரூபா அல்லது சுமார் 10.8 சதவீத அதிகரிப்பாகும்.
இதேபோன்ற விலை அதிகரிப்பு நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திலும் பதிவாகியுள்ளது.
அங்கு ஒரு கிலோகிராம் உள்நாட்டு சிவப்பு வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை 700 ரூபாவிலிருந்து 820 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது 120 ரூபா அல்லது 17.1 சதவீத அதிகரிப்பாகும்.
மேலும், அங்கு வெள்ளை முட்டையொன்றின் விலையும் 39.60 ரூபாவிலிருந்து 42 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
சில மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி
எவ்வாறாயினும், இதே காலப்பகுதியில் புறக்கோட்டை சந்தையில் சில மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் பீன்ஸின் சராசரி சில்லறை விலை 580 ரூபாவிலிருந்து 560 ரூபாவாகவும், முட்டைக்கோஸின் விலை 720 ரூபாவிலிருந்து 700 ரூபாவாகவும் குறைந்துள்ளது.
அதேபோன்று, ஒரு கிலோகிராம் தக்காளியின் சராசரி சில்லறை விலையும் 680 ரூபாவிலிருந்து 650 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.













