பிரித்தானிய பிரதமர் ஆண்டி பேர்னாம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க உள்ளார்.
பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னர், இரு தரப்புக்கும் இடையிலான உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் இந்த ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன.
இந்த ஒப்பந்தங்கள் 2040ஆம் ஆண்டுக்குள் பிரிட்டனின் பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு சுமார் 17 பில்லியன் பவுண்டுகள் வரை பங்களிக்கக்கூடும் என அரசு தெரிவித்துள்ளது.
எனினும், இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளை பிரிட்டன் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும், பிரித்தானியா சுதந்திரமான முடிவெடுக்கும் அதிகாரம் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.
ஒப்பந்தத்தின் முழு விபரங்களையும் நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கெமி பேடனாக் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என்றும் கன்சர்வேட்டிவ் கட்சி எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், புதிய ஒப்பந்தம் பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கும் உதவும் என பிரதமர் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

















