தெற்காசியாவின் முதலாவது ‘ஏர் டோம்’ (Air Dome) கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் (Port City Colombo) அமைக்கப்பட்டு, அதற்கான காற்று நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
புதுமையான நிகழ்வு ஏற்பாட்டு மையமாக உருவாக்கப்பட்டு வரும் இந்தக் கட்டமைப்பு, ஒரே நேரத்தில் 4,000 விருந்தினர்களுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சில சிவில் நிர்மாணப் பணிகள் இன்னும் நிறைவடைய வேண்டியுள்ள நிலையில், 2026 டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த வசதி பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏர் டோம் கட்டமைப்பானது சர்வதேச மாநாடுகள், கண்காட்சிகள், வர்த்தகக் கூட்டங்கள் மற்றும் ஊக்குவிப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட பிரமாண்டமான நிகழ்வுகளை நடத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக CHEC Port City Colombo (Pvt) Ltd நிறுவனத்தின் காணி அபிவிருத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான ஷலாகா விஜேரத்ன தெரிவித்தார்.
மேலும், துபாய் உள்ளிட்ட சர்வதேச நிகழ்வு ஏற்பாட்டு மையங்களில் காணப்படும் இத்தகைய கட்டமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் மிகப்பெரிய பல்நோக்கு மாநாட்டு மையம் கொழும்பு துறைமுக நகரில் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னதாக, இடைக்கால நிகழ்வு ஏற்பாட்டு மையமாக இந்த ஏர் டோம் செயற்படவுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள நிரந்தர மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில், 4,000 பேர் அமரக்கூடிய உள்ளக பல்நோக்கு அரங்கும், ஒரே நேரத்தில் 5,000 பேருக்கு இடமளிக்கக்கூடிய வெளிப்புற நிகழ்வு ஏற்பாட்டுப் பகுதியும் அமைக்கப்படவுள்ளன.
அத்துடன், இந்த மாநாட்டு மையத்திற்கு அருகாமையில் 400 முதல் 450 அறைகளைக் கொண்ட நட்சத்திரத் தரத்திலான வர்த்தக ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கும் கொழும்பு துறைமுக நகரின் பிரதான திட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













