டிலுக்ஷா
இங்கிலாந்தின் கரையோரப் பகுதிகளில் கடலரிப்பு அபாயம் அதிகரித்து வரும் நிலையில், பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளைக் கண்காணித்து, பாதுகாக்க 11 மில்லியன் பவுண்ஸ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கரையோரப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களைத் துல்லியமாகக் கண்காணிப்பதற்காக ட்ரோன்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த இந்த நிதி உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக 12 உள்ளூராட்சி சபைகளின் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. கடலரிப்பால் வீடுகள், வீதிகள் மற்றும் ரயில் மார்க்கங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், முன்கூட்டியே ஆபத்தைக் கண்டறிந்து மக்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கமென கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் முகமையின் மதிப்பீட்டின்படி, இங்கிலாந்தில் சுமார் 3,500 வீடுகள் 2055 ஆம் ஆண்டுக்குள் கடலரிப்பு அபாயத்தை எதிர்கொள்ளக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சோமர்செட் (Somerset) பகுதியில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் குடியிருப்புகளைப் பாதுகாப்பதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்வதும், கடலரிப்பு வேகம் அதிகரிப்பதும் கரையோர மக்களின் வாழ்விடங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக இந்த நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளது












