டிலுக்ஷா
பிரித்தானியாவின் மிகப்பெரிய பொலிஸ் பிரிவான மெட்ரோபொலிட்டன் பொலிஸ் (Metropolitan Police), நிறுவன ரீதியாக இனவாதம், பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான பாகுபாடு கொண்ட அமைப்பாகத் தொடர்ந்தும் செயற்படுவதாகப் புதிய சுயாதீன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
லண்டன் பொலிஸ் பிரிவின் செயற்பாடுகள் மற்றும் அதன் பண்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக, 2023ஆம் ஆண்டு லூயிஸ் கேசி (Louise Casey) தலைமையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் பரிந்துரைகள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து இந்தப் புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கில்லியன் ஃபேர்ஃபீல்ட் (Gillian Fairfield) தலைமையிலான குழு, 11 மாதங்களாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.
இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் முன்வைக்கப்பட்ட 14 பரிந்துரைகளில், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பொலிஸ் பிரிவு எட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது பரிந்துரைகளில் ஓரளவு முன்னேற்றமும், ஏனைய ஐந்து பரிந்துரைகளில் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்வதில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மத்தியில் நம்பிக்கை குறைவாக உள்ளதென்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள மெட்ரோபொலிட்டன் பொலிஸ் (Metropolitan Police) ஆணையாளர் சேர் மார்க் ரௌலி (Sir Mark Rowley), கடந்த சில ஆண்டுகளில் 1,800 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.












