ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய ‘ஏ’ அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது
கட்டாரின் தோஹாவில் நடைபெற்று வந்த வரும் இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ‘ஏ’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களைக் குவித்தது.
இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா 63 பந்துகளில் 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 78 ஓட்டங்களையும், இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய ஷாபாஸ் அஹமட் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இன்னிலையில் 318 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை ‘ஏ’ அணிக்கு, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சினெத் ஜயவர்தன மற்றும் லசித் குரூஸ்புள்ளே ஆகியோர் மிரட்டலான தொடக்கத்தை வழங்கினர்.
இந்நிலையில் நிஷான் மதுஷ்க மற்றும் அணித் தலைவர் பவன் ரத்நாயக்க பொறுப்புடன் நிதானமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
அதனடிப்படையில் இலங்கை அணி 41.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.













