த.ரஸ்மிலா
பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், மேலும் 2.5 இலட்சம் குடும்பங்களுக்கு நீர்க்கட்டணச் சலுகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் மூலம் தகுதியுள்ள குடும்பங்கள் ஆண்டுக்குச் சராசரியாக 428 பவுண்ஸ் வரை நீர்க்கட்டணத்தில் சேமிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சுமார் 3 இலட்சம் குடும்பங்கள் பயன்பெறும் ‘வோட்டர்ஷுவர்’ (WaterSure) திட்டத்தின் கீழ், 19 வயதுக்குட்பட்ட மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கும் மருத்துவக் காரணங்களால் அதிக நீரைப் பயன்படுத்த வேண்டியவர்களுக்கும் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.
இதற்காகத் தொழில், ஓய்வூதியத் திணைக்களத்தின் தரவுகளைப் பயன்படுத்தி, தகுதியுள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு நேரடியாகத் தொடர்புகொள்ள நீர் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், நீர் நிறுவனங்களின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்து, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கப் புதிய தண்ணீர் கண்காணிப்பு அமைப்பும் (Water Watchdog) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீர்க்கட்டணச் சுமையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதை உறுதிப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனப் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.














