த.ரஸ்மிலா
பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரிட்டனின் அமைச்சர் டக்ளஸ் அலெக்சாண்டர் (Douglas Alexander) வலியுறுத்தியுள்ளார்.
இன்று இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறும் பிரித்தானியா – இத்தாலி பொன்டிக்னானோ (Pontignano) மாநாட்டில் உரையாற்றவுள்ள அவர், கடந்த வாரம் பிரஸ்ஸல்ஸில் எட்டப்பட்ட பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் ஒரு தொடக்கம் மாத்திரமே என்றும், இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான அடித்தளம் என்றும் தெரிவிக்கவுள்ளார்.
பிரெக்ஸிட் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதன் விளைவுகள் தற்போது தெளிவாகத் தெரிவதாகக் குறிப்பிடவுள்ள Douglas Alexander, மாறிவரும் உலக அரசியல், பொருளாதாரச் சூழலில் ஐரோப்பிய நாடுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது அவசியம் எனவும் சுட்டிக்காட்டவுள்ளார்.
இதனிடையே, ஸ்கொட்லாந்தின் எதிர்காலம் ஐரோப்பாவுடனான கூட்டாண்மையிலேயே தங்கியுள்ளதாகவும், 2016ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என 62% ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களித்ததை நினைவுபடுத்தியும் Alexander தெரிவிக்கவுள்ளார்.
இதேநேரம் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றைச் சேர்ந்த தலா ஒரு இலட்சம் இளைஞர்கள் மூன்று ஆண்டுகள் வரை வேலை, கல்வி, தன்னார்வப் பணிகள், பயணங்களில் ஈடுபடுவதற்கான இளைஞர் அனுபவத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், 2027ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் மீண்டும் எராஸ்மஸ் பிளஸ் (Erasmus+) கல்விப் பரிமாற்றத் திட்டத்தில் இணைவதன் மூலம் இளைஞர்களுக்கான சர்வதேச கல்வி வாய்ப்புகள் விரிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது














