நாளை (30) முன்னெடுக்கப்படவுள்ள நாடளாவிய தொழிற்சங்கப் பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (29) அறிவிக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தீர்மானம் இன்று காலை நடைபெறவுள்ள கலந்துரையாடலைத் தொடர்ந்து எடுக்கப்படும் என அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தற்போது தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இரண்டு எரிபொருள் விநியோக நிறுவனங்களினால் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கழிவு வீதம் நியாயமற்ற முறையில் குறைக்கப்பட்டமை, சட்டவிரோதமாக பெறுமதி சேர் வரி (VAT) அறவிடப்படுகின்றமை, தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் விநியோகிக்கப்படாமை மற்றும் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கமும் நிர்வாகமும் தலையிடாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, நாளை நடைபெறவுள்ள நாடளாவிய தொழிற்சங்கப் பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவளிக்குமாறு எரிபொருள் விநியோகஸ்தர்களிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.














