2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு சதித்திட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக துருக்கியின் உட்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு தெரிவித்துள்ளார்.
‘ஜூலை 15க்குப் பின்னால் அமெரிக்கா உள்ளது என்பது அப்பட்டமாக தெளிவாகிறது. அவர்களின் உத்தரவின் பேரில் அதை நிறைவேற்றியது ஃபெட்டோ தான்’ என அவர் மேலும் கூறினார்.
எனினும், இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை இதுதொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், ‘2016இல் துருக்கியில் நடந்த ஆட்சி கவிழ்ப்பில் அமெரிக்காவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை. துருக்கியின் மூத்த அதிகாரிகள் கூறியதற்கு மாறாக, சமீபத்திய கூற்றுக்கள் முற்றிலும் தவறானவை.
துருக்கியில் நிகழ்வுகளுக்கான அமெரிக்க பொறுப்பு குறித்த ஆதாரமற்ற மற்றும் பொறுப்பற்ற கூற்றுக்கள் நேட்டோ நட்பு மற்றும் அமெரிக்காவின் மூலோபாய பங்காளியாக துருக்கியின் நிலைக்கு முரணானவை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி ஜனாதிபதி தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கீழ் இறக்கி, இராணுவ ஆட்சியை கொண்டுவர குர்திஸ்தான் தீவிரவாத அமைப்பான பி.கே.கே என்று அறியப்படும் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சியை விட மிக மோசமான தீவிரவாத குழு முயற்சி செய்தது.
எனினும், பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடித்தனர். இதன்போது நாட்டின் விடுதலைக்காக 161 பொதுமக்கள் உயிரிழந்ததோடு, இந்த திட்டத்தை தீட்டிய 20 பேர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இராணுவ புரட்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள், பொலிஸார், அரசு ஊழியர்கள், புரட்சிக்கு உதவிய பொதுமக்கள் என 50,000 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் அரசு ஊழியர்களை துருக்கி அரசாங்கம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்த இராணுவ புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவின், பென்சில்வேனியாவில் வசிக்கும் எர்டோகனின் முன்னாள் நண்பரான போதகர் ஃபெத்துல்லா குலன் மீது அங்காரா நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறது.
அங்காராவிடம் நம்பகமான சான்றுகள் இல்லாததைக் காரணம் காட்டி, குலேனை ஒப்படைக்க வேண்டும் என்ற துருக்கிய கோரிக்கைகளை வொஷிங்டன் பலமுறை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.