மியன்மாரில் இவ்வார ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் யாங்கோனின் வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
இந்தப் போராட்டம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றதோடு, தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், ‘இராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிராக கடும் முழக்கங்களை வெளியிட்டதுடன் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, இராணுவத்துக்கு எதிரான போராட்டங்களையடுத்து மியன்மாரில் இணையம் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் எட்டாம் திகதி நடந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி வெற்றிபெற்ற நிலையில், அதில் மோசடி இடம்பெற்றதாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மியன்மாரில் இராணுவ ஆட்சியை்க கைவிடுமாறு உலக நாடுகள் வலியுறுத்திவருவதுடன், பொருளாதாரத் தடை ஏற்படுத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.