தென்கொரியாவில் சந்திரப் புத்தாண்டு விடுமுறையின்போது கடும் கட்டுப்பாடுகளைச் செயற்படுத்த வர்த்தக நிலையங்களுக்கு பிரதமர் சுங் சை-கியுன் (Chung Sye-kyun) அறிவுறுத்தியுள்ளார்.
முக்கியமாக தலைநகர் சியோல் பகுதியில் உள்ள உணவகம் மற்றும் பிற வணிக உரிமையாளர்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த அறிவுறுத்தலை பிரதமர் விடுத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை தலைநகர் சியோலுக்கு வெளியே அரை மில்லியனுக்கும் அதிகமான உணவகங்கள் மற்றும் பிற வணிகங்களுக்கு ஊரடங்கு உத்தரவுகளை அதிகாரிகள் தளர்த்தியுள்ளனர். இந்நிலையில், கொரோனா சுகாதார நடவடிக்கைகளை கடுமையாகப் பின்பற்ற குறித்த பகுதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்திரப் புத்தாண்டு விடுமுறை வரும் பெப்ரவரி 11ஆம் திகதி ஆரம்பிக்கிறது. இந்தப் புத்தாண்டில் பல்லாயிரக்கணக்கான கொரியர்கள் நாடு முழுவதும் குடும்பங்களுடன் கொண்டாட்டங்களுக்காக பயணங்களை மேற்கொள்வர். எனினும், இம்முறை கொரோனா தொற்றுநோய் காரணமாக பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தென்கொரியாவில் இதுவரை 81 ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் இறப்பு எண்ணிக்கை ஆயிரத்து 482 ஆகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.