பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இறுதியில், பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தென்னாபிரிக்கா அணி சார்பில் பிரிடோரியஸ் அசத்தலாக பந்து வீசி 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதையடுத்து, 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் தென்னாபிரிக்கா களம் இறங்கியது.
தொடக்க வீரர் ரீஸா ஹென்ரிக்ஸ், வான் பிஜியன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹென்ரிக்ஸ் மற்றும் வான் பிஜியன் தலா 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், தென்னாபிரிக்கா அணி 16.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 145 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாபிரிக்க அணியின் பிரிடோரியஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.
தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறவுள்ளது.