மியன்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிவழியில் போராடிய போராட்டக்காரர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 138பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. அமைப்பின் பொது செயலாளரின் செய்தி தொடர்பு அதிகாரி ஸ்டெபானி டுஜார்ரிக் தெரிவித்துள்ளார்.
யாங்கூன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 38 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெருமளவிலானோர் லெயிங் தாயிர் பகுதியை சேர்ந்தவர்கள். கடந்த சனிக்கிழமை 18பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே மியன்மார் மக்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக நடந்து வரும் தொடர் வன்முறைக்கு ஐ.நா. பொது செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மியன்மார் மக்களுக்கு ஆதரவாக ஓரணியில் திரள சர்வதேச சமூகத்திற்கு அவர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோன்று மியன்மார் நாட்டில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு ஐ.நா. பொது செயலாளருக்கான சிறப்பு தூதர் கிறிஸ்டைன் ஸ்கிரானெர் பர்கனெரும் நேற்று கடும் கண்டனம் வெளியிட்டார்.