வடக்கு அயர்லாந்தில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தற்போது தங்கள் கொவிட்-19 தடுப்பூசி நியமனத்தை பதிவு செய்யலாம் என்று சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் அறிவித்துள்ளார்.
தகுதியுடையோர் மற்றும் தடுப்பூசி பெற விரும்புவோர் ஒன்லைனில் முன்பதிவு செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்காக ஏழு பிராந்திய தடுப்பூசி மையங்களில் முன்பதிவு இடங்கள் உள்ளன.
முதல் மூன்று மணிநேரங்களில் 30,000 பேர் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் தெரிவித்தார்.
ஃபைஸர் தடுப்பூசியை முதல் டோஸாகப் பெற்ற எவரும் தங்களது இரண்டாவது டோஸுக்கு ஃபைஸர் தடுப்பூசியைப் பெறுவார்கள்.
‘தடுப்பூசியின் நன்மைகள் அபாயங்களை விட அதிகமாக உள்ளது’ என்று வடக்கு அயர்லாந்தின் சுகாதார அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
அயர்லாந்து குடியரசில் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக வடக்கு அயர்லாந்தில் சுகாதார அதிகாரிகள் கூறியதை அடுத்து இது வருகிறது.
தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்துவது ஏற்கனவே குடியரசின் நோய்த்தடுப்பு திட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், சுகாதார ஊழியர்களுக்கும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கும் சுமார் 30,000 தடுப்பூசி நியமனங்கள் தாமதமாகலாம்.