இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க இந்தியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில், பிரசீத் கிருஸ்ணா, சூர்யகுமார் யாதவ் மற்றும் குர்ணல் பாண்ட்யா ஆகிய வீரர்கள், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் பெறுகின்றனர்.
18பேர் கொண்ட அணியில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த அவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில், இடம்பெற்றிருந்த மணீஷ் பாண்டே, மாயங்க் அகர்வால், சஞ்சு சம்சன், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம்பெறவில்லை.
சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,
விராட் கோஹ்லி தலைமையிலான அணியில், ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்ட்யா, ரிஷாப் பந்த், கே.எல்.ராகுல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், குர்ணல் பாண்ட்யா, வொஷிங்டன் சுந்தர், டி நடராஜன், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், பிரசீத் கிருஷ்ணா, ஷார்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியக் கிரிக்கெட் அணி கைப்பற்றியது.
தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் தற்போதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பதிவுசெய்துள்ளன.
அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி, எதிர்வரும் 23ஆம் திகதி புனேயில் நடைபெறவுள்ளது.