‘தமிழர் தாயகத்தை இழத்தல், தமிழர் நிலத்தை பாதுகாப்பதற்கான உபாயங்களை வகுத்தலும் பிரச்சினைகளை இனம்காணுதலும்’ என்னும் தலைப்பில் சர்வதேச மாநாடு, இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
குறித்த சர்வதேச மாநாடு, பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 12.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை (இலங்கை நேரம் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை) சூம் தொழில்நுட்பம் ஊடாக நடைபெற இருக்கின்றது.
வடக்கு- கிழக்கில் தீவிரம் அடைந்துள்ள நில அபகரிப்பு தொடர்பாகவும் அதற்கு எதிராக மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது ஆராய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கலந்துகொண்டு, விசேட உரையொன்றினை நிகழ்த்த இருக்கின்றார்.
மேலும் குறித்த மாநாட்டில், ஐ.நா.மனித உரிமைகள் சபை முன்னாள் உயர்ஸ்தானிகரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதியரசருமான நவநீதம் பிள்ளை, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணி டேவிட் மாடஸ், பிரித்தானியாவின் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணியும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளயரின் பாரியருமான செரி பிளயர் ஆகியோர் முதன்மை உரை நிகழ்த்த இருக்கின்றனர்.
இந்த மாநாட்டில் Zoom Meeting ID: 925 7244 2450 (Passcode: 238923) மூலமும் Web link: http://bit.ly/TamilLand ஊடாகவும் கலந்துகொள்ளலாம்.