வடகொரிய குடிமகன் ஒருவர் மலேசியாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து, மலேசியாவுடனான தூதரக உறவை துண்டித்துக் கொள்வதாக வட கொரியா அறிவித்துள்ளது.
இது ஒரு இழிவான, மன்னிக்க முடியாத செயற்பாடு என வட கொரிய வெளியுறவு அமைச்சு கருத்து தெரிவித்துள்ளது.
கோலாலம்பூரில் உள்ள தூதரகத்தில் பணியாற்றும் தமது ஊழியர்கள் அனைவரும் அடுத்த 48 மணி நேரத்தில் மலேசியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் வட கொரியா உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை வட கொரியாவின் தலைநகர் ப்யொங்யாங்கில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் வசித்து வந்த சோல் மியோங், 2019ஆம் ஆண்டு மலேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
வட கொரியாவுக்கு கப்பல் மூலம் சட்ட விரோதமாக பொருட்களை அனுப்ப போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டது.
ஐ.நா சபை தடைகளை மீறி சிங்கப்பூரில் இருந்து ஆடம்பரப் பொருட்களை வட கொரியாவுக்கு அனுப்பியதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மியோங், அரசியல் காரணங்களுக்காக அமெரிக்கா தன் மீது பழி சுமத்துவதாக கூறியுள்ளார்.