இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 354 கொரோனா நோயாளர்களில் 12 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கம்பஹா மாவட்டத்திலேயே நேற்றைய தினம் அதிக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் கம்பஹாவில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 58 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேரும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த 70 பேரும் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இலங்கையில் இதுவரையில், 90 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.