உலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை என்ற உண்மையை அரசாங்கம் சிங்கள மக்களிடம் மறைக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரசாங்கம் கூறியுள்ள கணக்குப்படி ஐ.நா. வாக்கெடுப்பில் இலங்கை தோற்கடிக்கப்படவில்லை என்றால், ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவும் வெற்றிபெறவில்லையென்றேக் கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து தனது உத்தியோப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், சிங்கள மக்களுக்கு இந்த விடயம் குறித்து எடுத்து கூற, முன்னாள் நல்லிணக்க துறைசார் அமைச்சர் என்ற முறையில் தான் கடமைப்பட்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையை கண்காணித்து, இலங்கை குறித்து வாய்மொழி அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபரிலும் எழுத்து மூல அறிக்கையை அடுத்த வருடம் பெப்ரவரி அல்லது மார்ச்சிலும் சமர்ப்பிக்கும்படி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம், ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை கோரியுள்ளது
இதையடுத்து, இலங்கை திருந்தாவிட்டால் பொறுப்பு கூறல் தொடர்பாக அடுத்து எடுக்கப்பட வேண்டிய காத்திரமான நடவடிக்கைகளை அடுத்த வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபரில் சிபாரிசு செய்யும்படியும் அந்தத் தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
இதனை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் இன்று கண்ணை கட்டி கணக்கு வித்தை காட்டுகிறது என விமர்சித்துள்ள மனோ, தமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளையும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத நாடுகளையும் கூட்டிக்காட்டி ஐ.நா. தீர்மானம் தோற்றுவிட்டது என கூறுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்ற வாக்குகள் சுமார் 69 இலட்சம். அவருக்கு எதிராக வாக்களித்த, வாக்களிக்காத, ஒட்டுமொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் தொகை சுமார் 90 இலட்சமாகும்.
ஆகவே வாக்களிக்காதவர்களும் நம்மவரே என்ற அரசாங்கத்தின் கணக்கின்படி, கோட்டாபய ராஜபக்ஷ உண்மையில் தோல்வியடைந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
ஆகவே அவர் அரசியலைவிட்டு வீட்டுக்கு போக வேண்டுமோ? என்ற கேள்வியை வெளிவிவகார அமைச்சர், தினேஷ் குணவர்தனவிடம் கேட்க விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்டமாக பன்னிரெண்டு விசேட ஊழியர்கள், இலங்கை கண்காணிப்பு தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் நியமிக்கப்பட உள்ளார்கள்.
மேலும் இலங்கை தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க சுமார் 29 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அலுவலகம் ஐநா பொதுசபையை கோரியுள்ளது.
இதன்மூலம், சாட்சியம், தகவல் ஆகியவற்றை சேகரிக்கும் கண்காணிக்கும் நடவடிக்கைகளை அலுவலகம் ஆரம்பிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு கூறல், நீதி விசாரணை, தண்டனை, நஷ்டஈடு, காணாமல் போனோர் அலுவலகம் சுயாதீனமாக செயற்படல், அரசியல் தீர்வு, மாகாணசபை தேர்தல்,பன்மைத்துவம் ஏற்பு ஆகியவை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் இனியும் சர்வதேசத்துடன் முரண்பட முடியாது என்றும் மனோ சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தகைய பிற்போக்கு அரசியல் விளையாட்டுக்கு இனி கால அவகாசமும் இல்லை என்றும் அதற்கு இது உள்நாட்டு மைதானமும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.