மொரிஷியஸுக்கு 2 இலட்சம் டோஸ் மேட் இன் இந்தியா கொவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
‘தடுப்பூசி மைத்ரி’ திட்டத்தின் கீழ் இந்தியா அதன் அண்டை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து உலகத்தை விடுவிப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த முயற்சியில், இந்தியா, மொரிஷியஸுக்கு ‘தடுப்பூசி மைத்ரி’ திட்டத்தின் கீழ் 2 இலட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளை வணிக ரீதியாக வழங்கியுள்ளது.
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவோம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற விழாவில், 2 இலட்சம் டோஸ் மேட் இன் இந்தியா தடுப்பூசிகளை மொரீஷியஸிடம் ஒப்படைத்ததாக இந்தியா டுவீட் செய்திருந்தது.
இந்நிலையில் குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட மொரிஷியஸ் நாடும், இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
இதேவேளை அண்மையில், வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் ஜுக்னாத் ஆகியோர் மொரீஷியஸுடன் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக கலந்துரையாடி இருந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதில் கோவாக்சின் பாரத் பயோடெக் 81 சதவீத இடைக்கால செயல்திறனை நிரூபித்துள்ளது.
தடுப்பூசி மைத்ரி முயற்சியின் கீழ், இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
குறித்த ‘தடுப்பூசி மைத்ரி’ திட்டத்தின் கீழ் 72 நாடுகளுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் கிடைத்துள்ளன.
மாலைத்தீவு, பூட்டான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.