வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இலங்கை ஜாம்பவான்கள் அணி 8 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள இலங்கை அணி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், இந்தியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ராய்பூர் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை ஜாம்பவான்கள் அணியும் தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை ஜாம்பவான்கள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வென் வைக் 53 ஓட்டங்களையும் அல்விரோ பீட்டர்சன் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில், குலசேகர 5 விக்கெட்டுகளையும் ஜெய சூரிய, மஹரூப், வீர ரத்ன ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 126 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 17.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சிந்தக ஜெயசிங்க ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களையும் உபுல் தரங்க ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்க ஜாம்பவான்கள் அணியின் பந்துவீச்சில், மகாயா நிட்னி மற்றும் அல்விரோ பீட்டர்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில், 5 விக்கெட்டுகளை சாய்த்த நுவான் குலசேகர தெரிவுசெய்யப்பட்டார்.