மியன்மாரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நேற்று ஒரேநாளில் 114 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியன்மாரில் கடந்த மாதம் முதலாம் திகதி ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசை கவிழ்த்து இராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து, இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை இராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.
இந்த நிலையில் தேசிய ஆயுதப்படை நாளை முன்னிட்டு நேற்று யாங்கன், மாண்டலே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.
அதேபோல் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நேற்று ஒரேநாளில் 114 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியன்மாரின் இரண்டாவது நகரமான மாண்டலேயில் சுட்டுக்கொல்லபட்ட 13 பேரில் ஐந்து பேர் இளைஞர்கள் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம், மதியம் 2.30 மணியளவில் நாடு முழுவதும் மொத்தம் 91 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளைஈ இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.